செய்திகள்
கொலை

தேவகோட்டை அருகே கம்யூனிஸ்டு பெண் நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை

Published On 2021-08-03 13:05 IST   |   Update On 2021-08-03 13:05:00 IST
தேவகோட்டை அருகே சொத்து பிரச்சனை தொடர்பாக கம்யூனிஸ்டு பெண் நிர்வாகியை சரமாரி வெட்டிக்கொலை செய்த என்ஜினீயரிங் மாணவரை போலீசார் கைது செய்தனர்.
தேவகோட்டை:

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள தச்சவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி மீனாட்சி (வயது 55). கம்யூனிஸ்டு கட்சியில் நிர்வாகியாக இருந்தார்.

செல்வராஜூக்கும், அவரது சகோதரர் சேகருக்கும் நீண்ட காலமாக சொத்து பிரச்சனை இருந்து வருகிறது. இதனால் இரு குடும்பங்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இரு தரப்பினரும் போலீசில் புகாரும் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் சேகரின் மகன் பாலா (19) இன்று தனது பெரியப்பா வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கிருந்த பெரியம்மா மீனாட்சியிடம் சொத்து பிரச்சனை குறித்து கேட்டுள்ளார். இதில் 2 பேருக்கும் வாக்குவாதம் முற்றியதாக தெரிகிறது.

அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில் பாலா தான் மறைத்து வைத்து கொண்டு வந்திருந்த அரிவாளை எடுத்து மீனாட்சியை சரமாரியாக வெட்டினார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மீனாட்சி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அதற்குள் அக்கம், பக்கத்தினர் அங்கு திரண்டதால் பாலா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

கொலை குறித்து தகவல் அறிந்த தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், தாலுகா இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டித்துரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் மீனாட்சியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே தப்பி ஓடிய பாலா, தேவகோட்டை தாலுகா போலீசில் சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

கைதான பாலா 2-ம் ஆண்டு என்ஜினீயரிங் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News