செய்திகள்
கார்த்தி - சுந்தரபாண்டி

வெல்டிங் பட்டறை உரிமையாளர் கொலையில் 2 பேர் கைது

Published On 2021-07-31 11:24 IST   |   Update On 2021-07-31 11:24:00 IST
காரைக்குடியில் வெல்டிங் பட்டறை உரிமையாளர் கொலையில் 2 பேர் கைது தங்கை தற்கொலைக்கு காரணமாக இருந்ததால் பழி வாங்கினர்
காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 45). தேவகோட்டை ரஸ்தாவில் வெல்டிங் பட்டறை நடத்தி வந்த இவர் காரைக்குடி தேனாற்றுப்பாலம் அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலை காரைக்குடி தெற்கு போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலையாளிகள் யார்? என்பது குறித்து தெரியவில்லை.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. தனிப்படையினர் காரைக்குடி பஸ் நிலைய பகுதியில் கண்காணிப்பு பணியில் இருந்தபோது சந்தேகத்திற்கிடமாக 2 பேர் நிற்பதை பார்த்தனர்.

அவர்களை போலீசார் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனை தொடர்ந்து 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது அவர்கள் மகாலிங்கம் கொலையில் தொடர்புடையவர்கள் என தெரிய வந்தது. அதன்பேரில் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கொலைக்கான காரணம் குறித்து 2 பேரும் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர். தங்கை தற்கொலைக்கு மகாலிங்கம் தான்காரணம் என அவரை கொலை செய்ததாக 2 பேரும் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட மகாலிங்கத்திற்கும், தேவகோட்டையைச் சேர்ந்த ராதா என்ற பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. ராதாவின் கணவர் மணிகண்டன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.

அவருக்கு மனைவியின் தகாத செயல் குறித்து தெரியவந்ததும் கண்டித்தார். கணவருக்கு தனது கள்ளக்காதல் விவகாரம் தெரிந்ததால் ராதா மனவேதனை அடைந்தார்.

சில நாட்கள் சோகத்தில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இதனால் அவரது 2 குழந்தைகளும் கவனிப்பாரற்ற நிலைக்கு ஆளானார்கள். இது மணிகண்டனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

ராதாவின் சகோதரர்கள் சுந்தரபாண்டி, கார்த்தி ஆகியோருடன் ஆலோசித்தார்.

ராதா தற்கொலைக்கு காரணமான மகாலிங்கத்தை வாழவிடக்கூடாது என அவர்கள் கருதினர். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டு அதற்கான நேரத்திற்காக காத்திருந்தனர்.

அதன்படி கடந்த சில மாதங்களாக மகாலிங்கத்தின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர். நேற்று மகாலிங்கம் தனியாக மோட்டார் சைக்கிளில் செல்வதை பார்த்தனர். அவரை மணிகண்டன் உள்பட 3 பேரும் ஆம்னி வேனில் பின்தொடர்ந்தனர்.

காரைக்குடி தேனாற்று பாலம் அருகே ஆள் நடமாட்டம் இல்லாததை பார்த்து மோட்டார் சைக்கிளை ஆம்னி வேனை வைத்து மறித்துள்ளனர். இதனால் மகாலிங்கம் அதிர்ச்சி அடைந்து தப்பி ஓட முயன்றுள்ளார்.

ஆனால் மணிகண்டன், சுந்தரபாண்டி, கார்த்தி ஆகியோர் சுற்றிவளைத்து அரிவாளால் வெட்டி சாய்த்து விட்டு தப்பி சென்று விட்டனர். ஆனால் போலீசாரின் தேடுதல் வேட்டையில் சுந்தரபாண்டி, கார்த்தி சிக்கி விட்டனர். தலைமறைவான மணிகண்டனை போலீசார் தேடி வருகின்றனர்.

கொலை நடந்த சில மணி நேரத்திற்குள் கொலையாளிகளை கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் பாராட்டு தெரிவித்தார்.

Similar News