செய்திகள்
வெறிச்சோடி கிடக்கும் குன்னூர் சிம்ஸ் பூங்கா

நீலகிரி சுற்றுலா தலங்கள் மூடலால் ரூ.6 கோடி வருவாய் இழப்பு

Published On 2021-06-23 09:17 GMT   |   Update On 2021-06-23 09:17 GMT
தமிழகத்தில் பரவிய கொரோனா தொற்றின் 2-வது அலை காரணமாக நீலகிரிக்கு ஏப்ரல் 20-ந் தேதியில் இருந்து சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு, மீண்டும் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

ஊட்டி:

சர்வதேச சுற்றுலா தலமாக நீலகிரி மாவட்டம் விளங்குகிறது.

இந்த மாவட்டத்தில் நிலவும் இயற்கை சூழல், சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பதற்காக வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

குறிப்பாக கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் சுமார் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருவார்கள். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் ஊட்டி படகு இல்லம், பைக்கார படகு இல்லம், தொட்டபெட்டா காட்சி முனை போன்றவைகள் உள்ளன.

கோடை சீசனின் போது இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பதற்கு வசதியாக கோடை விழாக்கள் நடத்தப்படும். கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் சுற்றுலா பயணிகள் வர தடை விதித்ததால் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு கோடை விழா ரத்து செய்யப்பட்டது. இதனால் நீலகிரியில் சுற்றுலா தொழில் கடும் சரிவை சந்தித்தது.

தொற்று குறைந்த பின் கடந்த ஆண்டு செப்டம்பரில் மீண்டும் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டது. சுற்றுலா தலங்கள் திறப்பு மற்றும் சுற்றுலா பயணிகள் வருகையால் இந்த ஆண்டும் கோடை விழா நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் பரவிய கொரோனா தொற்றின் 2-வது அலை காரணமாக நீலகிரிக்கு ஏப்ரல் 20-ந் தேதியில் இருந்து சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு, மீண்டும் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதன் காரணமாக இந்த ஆண்டு நடைபெற இருந்த கோடை விழாவும் ரத்து செய்யப்பட்டது.

கடந்த 2 மாதங்களாக சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு ரூ.6 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. படகு இல்லத்தில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் டிசம்பர் வரை படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் 8 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்தது. அதன்பின் டிசம்பரில் திறக்கப்பட்ட நிலையில் 3 மாதம் மட்டுமே திறக்கப்பட்டிருந்தது. அதன்பின் கொரோனா 2-வது அலையால் தற்போது 2 மாதங்களாக மூடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டில் இருந்து தற்போது வரை கடந்த 14 மாதங்களில் சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு ரூ.20 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News