செய்திகள்
சிறுத்தை

மஞ்சூர் அருகே ஒரே நாளில் 2 ஆடுகளை அடித்து கொன்ற சிறுத்தை

Published On 2021-06-22 15:04 IST   |   Update On 2021-06-22 15:04:00 IST
பள்ளியை சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள மதில் சுவரின் மறுபுறம் அடர்ந்த புதர்களும் தேயிலை தோட்டங்களும் உள்ளது. இதனால் காட்டு பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பள்ளி வளாகத்திற்குள் ஊடுறுவுகிறது. சமீபகாலமாக சிறுத்தை ஒன்று அவ்வப்போது பள்ளி வளாகத்திற்குள் நடமாடி வருகிறது.

மஞ்சூர்:

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மேல்பஜார் பகுதியில் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி உள்ளது. தற்போது கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள், மாணவிகள் நடமாட்டம் இல்லாமல் பள்ளி வளாகம் வெறிச் சோடியுள்ளது.

இந்தநிலையில் பள்ளியை சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள மதில் சுவரின் மறுபுறம் அடர்ந்த புதர்களும் தேயிலை தோட்டங்களும் உள்ளது. இதனால் காட்டு பன்றிகள், காட்டு மாடுகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பள்ளி வளாகத்திற்குள் ஊடுறுவுகிறது. சமீபகாலமாக சிறுத்தை ஒன்று அவ்வப்போது பள்ளி வளாகத்திற்குள் நடமாடி வருகிறது.

நேற்று மாலை சுமார் 4 மணியளவில் பள்ளிமனை பகுதியை சேர்ந்த முருகன் என்பவருக்கு சொந்தமான ஆடுகள் பள்ளி வளாகத்திற்குள் மேய்ச்சலில் ஈடுபட்டு கொண்டிருந்தது. அப்போது புதர் மறைவில் பதுங்கி இருந்த சிறுத்தை மதில் சுவர் மீது தாவி ஏறியதுடன் மேய்ச்சலில் ஈடுபட்டு கொண்டிருந்த பெரிய ஆட்டின் மீது பாய்ந்து அதை கடித்து கொன்று அதன் ரத்தத்தை ருசித்தது.

இதை தொடர்ந்து ஆட்டின் உடலை வாயில் கவ்வியபடி மதில் சுவரை தாண்ட முற்பட்டபோது ஆட்டின் உடல் பள்ளி வளாகத்திற்குள்ளேயே விழுந்தது. இதை கண்ட அப்பகுதியை சேர்ந்த சிலர் கத்தி கூச்சலிடவே சிறுத்தை அருகில் இருந்த தேயிலை தோட்டத்திற்குள் சென்று மறைந்தது.

இதை தொடர்ந்து ஆட்டின் உரிமையாளரான முருகன் விரைந்து சென்று பள்ளி வளாகத்தில் கிடந்த ஆட்டின் உடலை எடுத்து சென்று விட்டார். இந்நிலையில் மாலை சுமார் 6 மணியளவில் ஆட்டின் உடலை தேடி அப்பகுதிக்கு மீண்டும் சிறுத்தை வந்துள்ளது.

அப்போது பள்ளியை ஒட்டி இருந்த தேயிலை தோட்டத்தில் சுப்ரமணி என்பவரது ஆடுகள் மேய்ச்சலில் ஈடுபட்டு கொண்டிருந்தது. இதை கண்ட சிறுத்தை நைசாக பதுங்கி சென்று ஒரு ஆட்டின் மீது பாய்ந்து அதை கடுமையாக தாக்கி காட்டிற்குள் தூக்கி சென்று விட்டது.

2 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் பள்ளி அருகே உள்ள குடியிருப்புகள் வசிப்பவர்கள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தியது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து குந்தா ரேஞ்சர் சரவணன் மேற்பார்வையில் வனவர் ரவிக்குமார் மற்றும் வனத்துறையினர் நேற்று காலை முதல் அரசு மகளிர் பள்ளியை ஒட்டியுள்ள தேயிலை தோட்டம் மற்றும் புதர்களில் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து காண்காணிப்பில் ஈடுபட்டனர்.

Similar News