செய்திகள்
கோப்புபடம்

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் நீலகிரி முதன்மை மாவட்டமாகும் - அமைச்சர் ராமச்சந்திரன் நம்பிக்கை

Published On 2021-06-19 12:05 GMT   |   Update On 2021-06-19 12:05 GMT
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்த தடுப்பு நடவடிக்கையால் கொரோனாதொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊட்டி:

வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஊட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 26,662 நபர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோயினால் 141 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 174 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் சுமார் 2,700 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2,474 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதில் 1,435 படுக்கைகள் காலியாக உள்ளன. 

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்த தடுப்பு நடவடிக்கையால் கொரோனாதொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இருப்பினும் இந்நோயை முழுமையாகக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.இதுவரை 2 லட்சத்து 26,822 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் சிறிய மாவட்டமாக உள்ளதால் அரசு தெரிவித்துள்ள வயதுக்கு உள்பட்ட அனைவருக்குமே தடுப்பூசி செலுத்த தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக, நீலகிரியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக கூடுதலாக தடுப்பூசிகள் பெறப்பட்டு வருவதால், இவர்கள் அனைவருக்குமே தடுப்பூசி செலுத்தி இந்தியாவிலேயே தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதன்மை மாவட்டமாக நீலகிரி மாவட்டத்தை மாற்றுவதற்கு அனைத்து வகையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.அதே போல, மாவட்டத்தில் 5,429 மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். அவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதில் இதுவரை 307 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எஞ்சியுள்ளவர்களுக்கும் அவர்களது இருப்பிடத்துக்கே சென்று தடுப்பூசி செலுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News