செய்திகள்
கூடலூர் அள்ளூர் வயல் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானை.

காயத்துடன் அவதி- தொடர்மழையால் காட்டு யானையை பிடிப்பதில் தாமதம்

Published On 2021-06-15 17:28 IST   |   Update On 2021-06-15 17:28:00 IST
காட்டு யானையை அடைத்து சிகிச்சை அளிக்க முதுமலையில் மரக்கூண்டு அமைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கூடலூர்:

கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஆண் காட்டு யானை ஒன்று காயத்துடன் சுற்றி வருகிறது. நாளுக்கு நாள் காயம் மோசமாகி சீழ்வடிவதால் வலியால் அவதிப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக வனத்துக்குள் செல்லாமல் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் விவசாய பயிர்களையும் நாசம் செய்து வருகிறது. இதனால் காட்டு யானையை பிடித்து முதுமலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் உத்தரவின்பேரில் காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதனால் கோவை மண்டல வன கால்நடை டாக்டர்கள் மனோகரன், சுகுமாரன், முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ் குமார் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் கூடலூரில் முகாமிட்டு காட்டு யானைநடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

மேலும் காயம் குணமடைய கடந்த சில தினங்களாக பழங்களுக்குள் மருந்துகளை மறைத்து வைத்து காட்டு யானைக்கு வனத்துறையினர் வழங்கி வருகின்றனர்.

இதனிடையே கூடலூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் காட்டு யானையை பிடிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் காட்டு யானை நிற்கும் பகுதியில் மயக்க ஊசி செலுத்துவதற்கு ஏற்ற இட வசதி இல்லாத நிலையில் உள்ளது. இதனால் திறந்தவெளி பகுதிக்கு காட்டு யானை இடம்பெயரும் வரை வனத்துறையினர் காட்டு யானையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதற்கிடையில், காட்டு யானையை அடைத்து சிகிச்சை அளிக்க முதுமலையில் மரக்கூண்டு அமைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், காட்டு யானை பிடிப்பதற்காக முதுமலையில் இருந்து கும்கி யானைகள் கொண்டுவர வேண்டியுள்ளது. மேலும் மழையும் தொடர்ந்து பெய்கிறது. இதனால் யானையை பிடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இருப்பினும் மழையை பொருட்படுத்தாது காட்டு யானையை பிடிக்க மருத்துவ குழுவினருடன் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சில தினங்களில் யானை பிடிக்கப்படும் என்றனர்.

Similar News