செய்திகள்
கூடலூர் பகுதியில் காயத்துடன் சுற்றி வரும் காட்டு யானை.

கூடலூரில் காயத்துடன் சுற்றும் காட்டுயானையை ஒரு வாரத்துக்குள் பிடிக்க திட்டம்

Published On 2021-06-12 15:58 IST   |   Update On 2021-06-12 15:58:00 IST
மற்றொரு யானையுடன் நடந்த சண்டையில் அந்த யானைக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் யானையை பிடித்து முதுமலைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது.
கூடலூர்:

கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தொரப்பள்ளி, அள்ளூர்வயல், தோட்டமூலா, ஏழுமுறம், மேல்கூடலூர், செம்பாலா, நந்தட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் கடந்த 2 ஆண்டுகளாக காயத்துடன் ஆண் காட்டு யானை ஒன்று சுற்றி வருகிறது. வனப்பகுதிக்குள் செல்லாமல் தொடர்ந்து ஊருக்குள் முகாமிட்டு வருகிறது. மேலும் விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது.

இதற்கிடையில் அந்த யானையின் காயத்தை குணப்படுத்துவதோடு வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முயற்சி செய்தனர். ஆனால் பல்வேறு காரணங்களால் தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடியவில்லை.

இந்த நிலையில் தற்போது அந்த காயம் பெரிதாகி சீழ் வடியும் நிலைக்கு மாறிவிட்டது. மேலும் வலியை தாங்க முடியாமல், அந்த யானை குட்டைகளில் உள்ள தண்ணீரில் பல மணி நேரம் நிற்கிறது. இது காண்போரை கண் கலங்க செய்கிறது. அந்த யானைக்கு தர்ப்பூசணி உள்ளிட்ட பழங்களில் மருந்துகளை வைத்து வனத்துறையினர் வழங்கி வருகின்றனர். மேலும் யானையின் அவதி தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இதுகுறித்து வனச்சரகர் ராமகிருஷ்ணன் கூறும்போது, மற்றொரு யானையுடன் நடந்த சண்டையில் அந்த யானைக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் யானையை பிடித்து முதுமலைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது. அங்கு வைத்து தொடர் சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.

Similar News