செய்திகள்
மழை

குன்னூரில் பலத்த மழை- ரேலியா அணை நிரம்பியது

Published On 2021-05-23 12:46 IST   |   Update On 2021-05-23 12:46:00 IST
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் தொடர் மழை காரணமாக குன்னூர் பகுதிக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ரேலியா அணை நிரம்பியது.

குன்னூர்:

மத்திய கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் நீலகிரி உள்பட மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. நேற்று காலை முதலே வானம் கருமேகங்கள் சூழ்ந்து மேகமூட்டமாக இருந்தது. காலை நேரமே இரவு நேரம் போல காட்சியளித்தது.

மாலை 5.30 மணியளவில் குன்னூர், அருவங்காடு, பர்லியார், கொலக்கெம்பை, ஒட்டுப்பட்டறை உள்ளிட்ட பல இடங்களில் பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் குன்னூர் பேருந்து நிலையம் சாலை, ஊட்டி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் சாலைகளில் ஊர்ந்து சென்றன. சில தாழ்வான பகுதிகள் மற்றும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது.

நாளை முதல் தளர்வற்ற ஊரடங்கு அறிவித்ததால் நேற்று மதியத்திற்கு பிறகே கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டிருந்தது. இதனால் குன்னூர் நகராட்சி மார்க்கெட் உள்பட பல கடைகள் திறந்திருந்தன. மக்கள் அனைவரும் கொட்டும் மழையிலும் நனைந்தபடி தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் தொடர் மழை காரணமாக குன்னூர் பகுதிக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ரேலியா அணை நிரம்பியது. ரேலியா அணையின் மொத்த அடி 42.3. தற்போது அணையில் 41 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ஊட்டி, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளிலும் மாலை முதல் மிதமானது முதல் கனமழை பெய்தது. இதனால் கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே மழை பெய்ய தொடங்கி உள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை மாநகர் பகுதிகளான ரேஸ்கோர்ஸ், சிங்காநல்லூர், ராமநாதபுரம், பாப்பநாயக்கன் பாளையம், ரெயில் நிலைய பகுதி, காந்திபுரம், பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை சாரல் மழை பெய்தது. இந்த மழையால் கோவை மாவட்டத்தில் நிலவிய வெப்பம் குறைந்து இதமான காலநிலை நிலவியது.

Similar News