செய்திகள்
நாகை மாவட்டத்தில் 5 நாட்களில் 100 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்படும் - கலெக்டர் பிரவீன் நாயர் தகவல்
நாகை மாவட்டத்தில் 5 நாட்களில் 100 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்படும் என கலெக்டர் பிரவீன் நாயர் தெரிவித்தார்.
நாகப்பட்டினம்:
நாகையில் கலெக்டர் பிரவீன் நாயர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இதை பெற்றுக்கொண்ட கலெக்டர் பிரவீன் நாயர் கூறியதாவது:-
நாகை அரசு மருத்துவமனையில் 130 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் உள்ளது. ஆனால் எல்லா படுக்கையும் நிரம்பியுள்ளது. நாள் ஒன்றுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 600 பேர் சிகிச்சைக்காக வருகின்றனர். இதனால் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் தேவைப்படுகிறது.
இதை கருத்தில் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி பெறப்பட்டு நாகை மற்றும் வேதாரண்யம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. டாக்டர்கள் கொண்டு அமைக்கப்பட்ட குழுவில் இன்னும் ஒரு மாத காலத்தில் 100 ஆக்சிஜன் படுக்கை வசதி தேவைப்படும் என தெரிவித்தனர்.
இதன் அடிப்படையில் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி பெறப்பட்டது. எனவே இன்னும் 5 நாட்களில் நாகை மாவட்டத்தில் 100 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்படும். இதை தவிர கீழ்வேளூர், திருப்பூண்டி ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்படும். இதற்கான அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது கூடுதல் கலெக்டர் பிரசாந்த், நாகை மாலி எம்.எல்.ஏ., வேதாரண்யம் அரசு மருத்துவ நிலைய மருத்துவ அதிகாரி முருகப்பன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
முன்னதாக கலெக்டர் பிரவீன் நாயர் கீழ்வேளூர் அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது மருத்துவமனையில் அனைத்து பிரிவுகளுக்கும் சென்று பார்வையிட்டார். மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு படுக்கை வசதி, சிகிச்சை அளிக்க உள்ள வசதிகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் மருத்துவமனையில் 50 படுக்கைகள் வசதி கொண்ட தனி சிகிச்சை மையம் அமைக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் கொரோனா சிகிச்சை மற்றும் பரிசோதனைக்கு வருபவர்களுக்கு தனியாக காத்திருப்பு அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். என அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது சுகாதார பணிகள் துணை இயக்குனர் சண்முகசுந்தரம். துணை இயக்குனர் (காசநோய்,) ராஜா, மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் லியாகத் அலி, தொற்றாநோய் ஒருங்கிணைப்பாளர் ராகவன் உள்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.