செய்திகள்
முதுமலையில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்ட வன ஊழியர்கள்.

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

Published On 2021-05-21 18:26 IST   |   Update On 2021-05-21 18:26:00 IST
புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட நெலாக்கோட்டை, கார்குடி, முதுமலை, தெப்பக்காடு, மசினகுடி உள்ளிட்ட பகுதிகளில் 37 வன குழுக்கள் அமைக்கப்பட்டு கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கூடலூர்:

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், மான்கள், புலிகள், கரடிகள், சிறுத்தை புலிகள், செந்நாய்கள் என வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இங்கு பருவ மழைக்கு முன்பு மற்றும் பிந்தைய காலகட்டத்தில் வனத்துறையினர் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுவது வழக்கம்.

இந்த நிலையில் கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. தற்போது கோடை காலம் முடிவடையும் நிலையில் உள்ளது. மேலும் இன்னும் சில திங்களில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது.

புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட நெலாக்கோட்டை, கார்குடி, முதுமலை, தெப்பக்காடு, மசினகுடி உள்ளிட்ட பகுதிகளில் 37 வன குழுக்கள் அமைக்கப்பட்டு கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு குழுவில் 3 பேர் இடம் பெற்றுள்ளனர். தெப்பக்காட்டில் வனச்சரகர் தயானந்தன் தலைமையில், மசினகுடியில் வனச்சரகர் மாரியப்பன் தலைமையில் கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. கணக்கெடுப்பு பணியில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

கோடை மற்றும் மழை காலத்தில் வனவிலங்குகளின் நடமாட்டம் உள்ளிட்ட தகவல்களை துறை ரீதியாக பதிவு செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் பருவ மழைக்கு முன்பு மற்றும் பின்பு வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி முதுமலையில் நடைபெற்று வருகிறது. இன்று (நேற்று) தொடங்கிய கணக்கெடுப்பு பணி வருகிற 25-ந் தேதி வரை நடக்கிறது. வனவிலங்குகளின் கால் தடங்கள், எச்சங்கள், நேரில் காணுதல் உள்ளிட்ட முறைகளில் வன விலங்குகள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News