செய்திகள்
நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் போலீசார் ‘இ-பதிவு’ தொடர்பான வாகன சோதனையில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

நாகை மாவட்டத்தில் ‘இ-பதிவு’ இல்லாமல் பயணம் செய்த 39 பேர் மீது வழக்குப்பதிவு

Published On 2021-05-19 11:57 GMT   |   Update On 2021-05-19 11:57 GMT
நாகை மாவட்டத்தில் ‘இ-பதிவு’ இல்லாமல் பயணம் செய்த 39 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் 19 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகப்பட்டினம்:

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க வருகிற 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 10 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு நடவடிக்கை எடுத்தும் கொரோனா தாக்கம் குறைந்தபாடில்லை. தமிழகத்தில் நேற்று முதல் ‘இ-பதிவு’ முறை அமலுக்கு வந்தது.

முக்கிய உறவினர்கள் இறப்பு, மருத்துவ சிகிச்சை போன்ற மிக அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பயணம் மேற்கொள்ள ‘இ-பதிவு’ அனுமதி பெற வேண்டும். இதன் மூலம் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் இருந்து யார்?, யார்? வருகிறார்கள் என்பதை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் நாகை மாவட்டத்தின் எல்லை பகுதிகளான நாகூர், கானூர், வால்மங்கலம், சேசமூலை, மானம்பேட்டை, அருந்தவன்புலம், செங்காதலை உள்ளிட்ட மாவட்டத்தின் எல்லை பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வெளி மாவட்டங்களில் இருந்து வந்த அனைத்து வாகனங்களையும் சோதனை செய்தனர். ‘இ-பதிவு’ அனுமதி இருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

இதுதவிர நகர் பகுதிக்குள் இரும்பு தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் வாகனங்களை நிறுத்தி விசாரணை நடத்தினர். இதில் அத்தியாவசிய தேவைக்கு செல்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். தேவையின்றி சுற்றியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ‘இ-பதிவு’ இல்லாமல் பயணம் செய்த 39 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 19 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

வாய்மேட்டை அடுத்த தாணிக்கோட்டகம் மற்றும் துளசியாப்பட்டினம் ஆகிய இரண்டு இடங்களில் இரும்பு தடுப்பு அமைத்து வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் ‘இ-பதிவு’ அனுமதி உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதித்தனர்.

திட்டச்சேரி, திருமருகல், அண்ணாமண்டபம், கங்களாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன், திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இரணியன் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசின் முழு ஊரடங்கு உத்தரவை மீறியும், முக கவசம் அணியாமலும் மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
Tags:    

Similar News