செய்திகள்
கோப்பு படம்.

குறிஞ்சிப்பாடி அருகே காதல் திருமணம் செய்த பெண் மா்ம மரணம்

Published On 2021-04-25 18:36 IST   |   Update On 2021-04-25 18:36:00 IST
குறிஞ்சிப்பாடி அருகே காதல் திருமணம் செய்த பெண், மா்மமான முறையில் இறந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, அண்ணன் போலீசில் புகார் கொடுத்தார்.
குறிஞ்சிப்பாடி:

குறிஞ்சிப்பாடி அடுத்த மேலபுதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 29). இவர் சிதம்பரத்தில் உள்ள தனியார் வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரும் வடலூர் ஆபத்தாரணபுரம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த வைஜெயந்திமாலா (29) என்பவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வைஜெயந்திமாலா, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது அண்ணன் வாஞ்சிநாதனுக்கு தகவல் வந்துள்ளது.

இதையடுத்து வாஞ்சிநாதன், குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் கொடுத்தார். அதில், எனது தங்கை வைஜெயந்திமாலா கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ராஜதுரை என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில நாட்களாக வரதட்சணை கேட்டும், குழந்தை இல்லை எனவும் கூறி கணவன்-மனைவி இடையே பிரச்சினை இருந்து வந்தது. இந் நிலையில் எனது தங்கை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றனர். எனவே அவரது சாவில் சந்தேகம் உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வைஜெயந்திமாலா, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வைஜெயந்திமாலாவுக்கு திருமணமாகி 10 மாதங்களே ஆவதால், கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீசன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News