செய்திகள்
கடலூர் மாவட்டத்தில் இதுவரை முக கவசம் அணியாத 11,881 பேருக்கு அபராதம்
கடலூர் மாவட்டத்தில் இதுவரை முக கவசம் அணியாத 11,881 பேருக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக முக கவசம் அணியாமல் செல்லுதல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமை போன்ற அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காத பொதுமக்கள், நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இதை சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, போலீசார் குழுவாகவும், போலீசார் தனியாகவும் அபராதம் வசூல் செய்து வருகின்றனர். அதன்படி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் உத்தரவின்பேரில் 7 உட்கோட்டங்களிலும் முக கவசம் அணியாமல் சென்ற நபர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.
கடந்த 9-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை முக கவசம் அணியாமல் சென்ற 11 ஆயிரத்து 881 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்துள்ளனர். சமூக இடைவெளியை கடைபிடிக்காத 209 பேரிடமும் அபராதம் விதித்துள்ளனர். மொத்தம் ரூ.23 லட்சத்து 83 ஆயிரத்து 650 அபராதமாக வசூலித்து உள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.