செய்திகள்
குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் சோப்பு நுரை போல் உள்ளதை படத்தில் காணலாம்.

குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம்

Published On 2021-03-30 13:46 GMT   |   Update On 2021-03-30 13:46 GMT
நாகை சட்டையப்பர் வீதி பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் மறியலில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.
நாகப்பட்டினம்:

நாகை நகராட்சிக்கு உட்பட்ட 27,28,30 ஆகிய வார்டு பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு நகராட்சி சார்பில் அடிபம்புகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதனை அந்த பகுதி மக்கள் குடிப்பதற்கும், சமையல் செய்வதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அடிபம்பில் இருந்து குடிநீருடன், கருப்பு நிறத்தில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனை அந்த பகுதி மக்கள் பயன்படுத்த முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

நாகை சட்டையப்பர் வீதி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நகராட்சி மூலம் வினியோகம் செய்யப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. மேலும் ஒருவித துர்நாற்றமும் வீசுகிறது. சில நேரங்களில் குழாயிலிருந்து குடத்தில் பிடிக்கும் தண்ணீரில் சோப்பு நுரை போல பொங்கி வருகிறது. இதனை குளிப்பதற்கு கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் அந்த நீரில் மறுநாளே புழுக்கள் உருவாகிறது. கோடைகாலம் தொடங்கி விட்டதால் குடிப்பதற்கு கூட தண்ணீர் இன்றி அவதிப்பட்டு வருகிறோம். வசதிபடைத்தவர்கள் குடிநீர் கேன்களை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் ஏழை மக்கள் வேறு வழி இன்றி இந்த கழிவுநீர் கலந்த குடிநீரையை பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. இந்த குடிநீரை குடித்தால் காலரா போன்ற தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.. எனவே நாகை நகராட்சிக்குட்பட்ட 27, 28, 30 ஆகிய வார்டு பகுதிகளில் தொற்று நோய் பரவுவதற்கு முன்பாகவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து. சுத்தமான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். இல்லையென்றால் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News