செய்திகள்
கந்தர்வகோட்டையில் நிதி நிறுவனத்தின் லாக்கரை உடைத்து கொள்ளை முயற்சி
கந்தர்வகோட்டையில் நிதி நிறுவனத்தின் லாக்கரை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி நடந்தது. அலாரம் ஒலித்ததால் மர்ம நபர் தப்பி ஓடி விட்டார்.
கந்தர்வகோட்டை:
கந்தர்வகோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள கட்டிடத்தின் மாடியின் முதல் தளத்தில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிதி நிறுவனத்தில் கந்தர்வகோட்டை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களது தேவைக்கு நகைகளை அடகு வைத்து பணம் பெற்று வருகின்றனர். இந்த நிறுவனத்தில் 3 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் நேற்று முன்தினம் வழக்கம்போல தங்களது பணியை முடித்துவிட்டு நிறுவனத்தை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த நிறுவனத்தின் பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த லாக்கரை உடைக்க முற்பட்டபோது அலாரம் ஒலித்தது. அலாரம் ஒலிக்கும் சத்தத்தை கேட்டதும் பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர். இதனால், அந்த மர்ம நபர் கொள்ளையடிக்கும் முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து அந்த நிதி நிறுவனத்தின் மேலாளர் சந்திரசேகரன் அளித்த புகாரின்பேரில், கந்தர்வகோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர்.
அப்போது கண்காணிப்பு கேமராக்களில் மர்ம நபர் ஒருவர் முகமூடி அணிந்து கையுறையுடன் இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது. முகமூடி அணிந்த அந்த மர்ம நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிதி நிறுவனம் செயல்படும் இடத்தின் அருகே இதேபோன்று மற்றொரு நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆனால் இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் இரவு நேர காவலர்கள் இல்லாததால் இந்த கொள்ளை முயற்சி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் இந்த கொள்ளை முயற்சி நடந்தது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.