செய்திகள்
காசநோய் ஆரம்ப அறிகுறி இருந்தால் அலட்சியமாக இருக்க கூடாது - கலெக்டர் பிரவீன்நாயர் அறிவுறுத்தல்
காசநோய் ஆரம்ப அறிகுறி இருந்தால் அலட்சியமாக இருக்க கூடாது என கலெக்டர் பிரவீன்நாயர் அறிவுறுத்தி உள்ளார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக காசநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். சுகாதார பணிகள் இணை இயக்குனர் மகேந்திரன் முன்னிலை வகித்தார்.
துணை இயக்குனர் (காசநோய்) ராஜா வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர், காசநோய் விழிப்புணர்வு உறுதிமொழியை வாசிக்க, டாக்டர்கள், செவிலியர்கள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-
காச நோயை அறவே ஒழிக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். காசநோய் ஆரம்ப அறிகுறிகளான 2 வாரங்களுக்கு மேல் இருமல், மாலை நேரக்காய்ச்சல், பசியின்மை, எடை குறைதல் உள்ளிட்டவை இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.
மற்ற நோய்களை போலவே காசநோயும் கிருமிகளால் வரக்கூடியது. எனவே யாரும் இதில் அலட்சியமாக இருக்க கூடாது. காசநோயை முற்றிலும் ஒழித்து, காச நோய் இல்லா தமிழகம் 2025 என்கிற இலக்கினை அடைய அனைவரும் பாடுபடவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து காசநோய் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார். மேலும் காசநோய் குறித்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள், டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.