செய்திகள்
கீழ்வேளூர் அருகே ஆற்றில் மணல் அள்ளிய 7 பேர் கைது
கீழ்வேளூர் அருகே ஆற்றில் மணல் அள்ளிய 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே கோகூர் வெட்டாறு பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது கோகூர் சிவன் கோவில் பின் பகுதியில் வெட்டாற்றில் சிலர் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மணல் அள்ளிய 7 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கோகூர் பகுதியை சேர்ந்த குமார் (38), பிரபு (19), வீரசேகர் (23), ராஜமோகன் (43), ஆசைதம்பி (37), ரமேஷ் (35), தொழுவத்துமேடு பகுதியை சேர்ந்த விக்னேஷ் (19) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரையும் கைது செய்தனர். மேலும் மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட 7 மாட்டுவண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.