செய்திகள்
ஐகோர்ட் மதுரை கிளை

வன்னியர் இட ஒதுக்கீடு வழக்குகள்- சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம்

Published On 2021-03-15 16:15 IST   |   Update On 2021-03-15 16:15:00 IST
வன்னியர் இட ஒதுக்கீடு வழக்குகளை சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம் செய்து நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு உத்தரவிட்டனர்.
மதுரை:

நெல்லையை சேர்ந்த மனோகரன் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பல்வேறு சமூகத்தை சேர்ந்த மக்கள் உள்ளனர். தமிழக அரசு வருகிற சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு. பிப்ரவரி 28-ந் தேதி சட்ட மசோதா ஒன்றை நிறைவேற்றியது.

பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர் சமூகத்தினருக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கப்படும். இதற்கு தமிழக ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளார்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தில் மொத்தமாக உள்ள 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

68 சமூகத்தை கொண்ட சீர்மரபினர்களுக்கு 7 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 40 சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு 2.5 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இதனால், 40 சமூகத்தை சேர்ந்த மக்களின் கல்வி, வேலை அனைத்தும் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல. முறையாக சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

ஆகவே, வன்னிய சமூகத்தினருக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்யவும் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்”என கூறியிருந்தார்.

இதே கோரிக்கையை முன்வைத்து மதுரையை சேர்ந்த சுரேஷ் என்பவரும் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு, இந்த வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு முதன்மை அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

Similar News