செய்திகள்
கோப்புபடம்

ரேஷன் பொருட்கள் வாங்குவதில் தகராறு - தீக்குளிக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு

Published On 2021-02-18 10:15 GMT   |   Update On 2021-02-18 10:15 GMT
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகே ரேஷன் பொருட்கள் வாங்குவதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக தீக்குளிக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
படப்பை:

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள சோமங்கலம் அடுத்த அமரம்பேடு பகுதியை சேர்ந்தவர் பவித்ரா (வயது 23), இவர் நேற்று முன்தினம் அமரம்பேடு பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அமரம்பேடு பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (19) இவர் 3-க்கும் மேற்பட்ட ரேஷன்கார்டுகளுக்கு பொருட்கள் வாங்கி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது பொருட்கள் வாங்க வந்த பவித்ரா நான் ஒரு கார்டுக்கு பொருட்கள் வாங்கி கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதனால் பாலாஜிக்கும், பவித்ராவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது அங்கு வந்த பவித்ராவின் சகோதரர் வினோத் பாலாஜியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அது கைகலப்பாக மாறியுள்ளது. இதனை தொடர்ந்து இவர்கள் அனைவரும் வீட்டுக்கு சென்று விட்டனர்.

இந்த நிலையில் பவித்ரா சோமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் பாலாஜி தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார். புகாரை பெற்றுக்கொண்ட சோமங்கலம் போலீசார் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் பாலாஜியின் தந்தை தாமோதரன் சோமங்கலம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் பவித்ராவின் சகோதரர் வினோத் நேற்று முன்தினம் இரவு தங்கள் வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டதாக புகார் அளித்தார். இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று சோமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு வந்த வினோத் நாங்கள் அளித்த புகாரின் பேரில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தாமதப்படுத்தியதாக கூறி கேனில் இருந்த டீசலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதனை பார்த்த சோமங்கலம் போலீசார் வினோத்தை காப்பாற்றி அவரது உடல் மீது தண்ணீரை ஊற்றினர். வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது சம்பந்தமாக சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News