செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு 21-ந்தேதி எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்

Published On 2021-02-17 04:01 GMT   |   Update On 2021-02-17 04:01 GMT
விராலிமலை அருகே காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு வருகிற 21-ந்தேதி காலை 10 மணி அளவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் 100 ஆண்டுகால கனவுத் திட்டம் காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டமாகும். இந்த திட்டம் 3 கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக காவிரி முதல் தெற்கு வெள்ளாறு வரை 118.45 கிலோ மீட்டர் தூரத்திற்கும், 2-ம் கட்டமாக தெற்கு வெள்ளாறு முதல் வைகை வரை 118.45 கி.மீ. முதல் 228.145 கி.மீ. வரையும் (109.695 கி.மீ.), 3-ம் கட்டமாக வைகை முதல் குண்டாறு வரை 228.145 கி.மீ. முதல் 262.19 கி.மீ. வரையும் (34.045 கி.மீ.) செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் முதல் கட்டமாக காவிரி முதல் தெற்கு வெள்ளாறு வரை 118.45 கி.மீ. தூரம் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது.

கரூர் மாவட்டத்தில் 47.235 கி.மீ. தூரமும், திருச்சி மாவட்டத்தில் 18.891 கி.மீ. தூரமும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 52.324 கி.மீ. தூரமும் கால்வாய் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தினால் மேற்கண்ட 3 மாவட்டங்களிலும் உள்ள 18 ஆயிரத்து566 எக்டேர் நிலங்கள் பாசன வசதி மேம்படும்.

காவிரி-தெற்கு வெள்ளாறு வரையிலான இத்திட்டத்திற்கு இரு கட்டங்களுக்கான மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசாணை பெறப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் 4.10 கி.மீ. தூரத்திற்கும், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 54.965 கி.மீ. முதல் 60.05 கி.மீ. வரையும் அதாவது திருச்சி மாவட்டத்தில் 1.83 கி.மீ. நீளமும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 3.525 கி.மீ. நீளத்திற்கும் கால்வாய் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி வருகிற 21-ந்தேதி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க உள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு ஏற்கனவே ரூ.14 ஆயிரம் கோடி திட்ட மதிப்பீடு செய்து பட்ஜெட்டில் முதற்கட்ட பணிகளுக்காக ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நிலமெடுப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தொடர்ந்து இதற்கான பல்வேறு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி இத்திட்டத்திற்கான டெண்டர் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் வருகிற 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டம், குன்னத்தூரில் வரலாற்று சிறப்பு மிக்க காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வருகை தந்து அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த விழாவிற்கு வருகை தரும் முதல்-அமைச்சருக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் 1 லட்சம் பேர் வரவேற்பு அளிக்க உள்ளார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு தலைமுறைகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள இவ்விழாவில் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News