செய்திகள்
வடகாடு அருகே அறுவடை செய்யப்பட்ட மஞ்சள் கொத்துகளை விற்பனைக்காக கட்டி அடுக்கி வரும் விவசாயிகள்.

இலுப்பூர், வடகாடு பகுதிகளில் கரும்பு, மஞ்சள் அறுவடை பணிகள் தீவிரம்

Published On 2021-01-13 17:08 IST   |   Update On 2021-01-13 17:08:00 IST
இலுப்பூர், வடகாடு பகுதிகளில் கரும்பு, மஞ்சள் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அன்னவாசல்:

இலுப்பூர், வீரப்பட்டி, சென்னப்பநாயக்கன்பட்டி, மேட்டுச்சாலை, குறுக்களையாப்பட்டி, பெருஞ்சுனை, சிறுஞ்சுனை, சித்துப்பட்டி, மேலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பொங்கல் பண்டிகைக்காக கரும்புகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இப்பகுதிகளில் உள்ள கரும்புகள் அறுவடை செய்யப்பட்டு வெளியூர்களுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பகுதிகளில் விளையும் கரும்பு அதிக இனிப்பு சுவை கொண்டது என்பதால் அதிக அளவிலான வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர்.

10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.180 முதல் ரூ.250 வரை வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. இங்கிருந்து கரும்புகள் லாரிகளில் ஏற்றப்பட்டு திருச்சி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

மேலும் புதுக்கோட்டை-விராலிமலை சாலையில் வீரப்பட்டி முதல் இலுப்பூர் வரை இருபுறமும் சாலையோரங்களில் கம்புக்களை கட்டி விவசாயிகளே கரும்புகளை நேரடியாக விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் கேட்டதும் தோட்டத்தில் இருந்து உடனடியாக வெட்டி தருகின்றனர்.

வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மஞ்சள் கொத்துக்களை பிடுங்கி விற்பனைக்கு கொண்டு செல்லும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஒருசில மஞ்சள் வியாபாரிகள் நேரடியாக மஞ்சள் பயிரிட்டுள்ள விவசாயிகளது, தோட்டத்திற்கு சென்று விலை பேசி வாங்கி செல்கின்றனர். தற்போது இப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இருந்தாலும் மழையை பொருட்படுத்தாமல் அறுவடை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆலங்குடி பகுதிகளில் கடந்த 9, 10-ந்தேதிகளில் 10 கரும்பு கொண்ட ஒரு கட்டு ரூ.300 முதல் ரூ.350-க்கு விற்கப்பட்டது. மழை காரணமாக தற்போது ஒரு கட்டு ரூ.200-க்கு மட்டுமே விற்கப்படுகிறது. இருப்பினும் பொங்கலுக்கு ஒரு நாள் தான் உள்ளது. கரும்பு விற்பனை ஆகாமல் தேங்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Similar News