செய்திகள்
மயிலாடுதுறையில் வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது
மயிலாடுதுறையில் வழிப்பறியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை திருவிழந்தூர் ஆழ்வார்குளம் தென்கரையை சேர்ந்த குமார் மகன் சத்தியபாரதி (வயது22). இவர் சம்பவத்தன்று சைக்கிளில் கடைக்கு சென்றுள்ளார். திருவிழந்தூர் தென்னமரச்சாலையை கடந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் சைக்கிளின் முன்னால் வந்து நிறுத்தியதோடு, சைக்கிளின் பின்னால் கேரியரில் வைத்திருந்த கைப்பையை பறித்துக் கொண்டு சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சத்தியபாரதி கூச்சலிட்டார். அந்த கைப்பையில் வங்கி ஏ.டி.எம்.கார்டு, செல்போன் என ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் இருந்தன. இந்த சம்பவம் தொடர்பாக சத்தியபாரதி மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டவர் மயிலாடுதுறை அருகே நீடூர் கீழத்தெருவை சேர்ந்த கலையரசன் மகன் கலைமணி (31) என்பது தெரியவந்தது. இதனை அடுத்து கலைமணியை போலீசார் பிடித்து அவர் பறித்து சென்ற கைப்பை, செல்போன், ஏ.டி.எம். கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கலைமணியை கைது செய்தனர்.