தமிழ்.. சமஸ்கிருதம்.. இரண்டில் எது பழமையான மொழி - மூத்த பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் சொன்ன பதில்
- சமஸ்கிருதத்தின் இளைய சகோதரி உருது.
- அக்தரை நோக்கி, தமிழ் மற்றும் சமஸ்கிருதம்.. இவற்றில் எந்த மொழி பழமையானது? என கேட்டார்.
பழமையான மொழி தமிழா அல்லது சமஸ்கிருதமா என்ற கேள்விக்கு பிரபல உருது கவிஞரும் மூத்த இந்தி திரைப்பட பாடலாசிரியருமான ஜாவேத் அக்தர் பதிலளித்துள்ளார்.
ராஜஸ்தான், ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழா கடந்த 15 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நாளை 19 ஆம் தேதியுடன் விழா நிறைவடையும்.
இதில் பல்வேறு கலைத் துறை சார்ந்த பிரபலங்கள் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜாவேத் அக்தரிடம் பார்வையாளர் ஒருவர் கேள்வி ஒன்றை எழுப்பினார்.
அதாவது, உருது அல்லது சமஸ்கிருதம்.. எந்த மொழி இவையிரண்டில் பழமையானது? என கேட்டார்.
இதற்கு அக்தர், என்ன மாதிரியான கேள்வியை என்னிடம் கேட்டிருக்கிறீர்கள்?, சமஸ்கிருதத்தின் இளைய சகோதரி உருது. சமஸ்கிருதம் உலகின் 2-வது தொன்மையான உயிர்ப்பான மொழி என கூறினார். உருது தோன்றி ஆயிரம் ஆண்டுகள் கூட ஆகியிருக்காது என்றார்.
கேள்வி எழுப்பியவர் மீண்டும் அக்தரை நோக்கி, தமிழ் மற்றும் சமஸ்கிருதம்.. இவற்றில் எந்த மொழி பழமையானது? என கேட்டார்.
அதற்கு அவர், தமிழ் உலகின் மிக பழமையான மொழியாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. சமஸ்கிருதம் 2-வது பழமையான மொழி என்றார். ஒரு மொழியை விட மற்றொன்று உயர்ந்தது என கூற முடியாது, சமஸ்கிருதம், உருது அல்லது தமிழ் ஆகியவை ஆயுதங்கள் அல்ல. அவை வார்த்தைகளால் மக்களை இணைக்கும் பாலங்கள் போன்றவை என்றார்.