செய்திகள்
பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

கழிவுநீர் வெளியேறி தெருக்களில் சூழ்ந்துள்ளதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2020-12-17 14:33 IST   |   Update On 2020-12-17 14:33:00 IST
மயிலாடுதுறையில் கழிவுநீர் வெளியேறி தெருக்களில் சூழ்ந்துள்ளதை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை கூறைநாடு அண்ணா வீதியில் பாதாள சாக்கடை ஆள் நுழைவு தொட்டிகளில் இருந்து கழிவுநீர் வெளியேறி தெருக்களில் சூழ்ந்து உள்ளதை கண்டித்து பூக்கடைத்தெருவில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, நகராட்சி பொறியாளர் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை அடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

பின்னர் நகராட்சி அதிகாரிகளை தெருக்களுக்கு அழைத்துச்சென்று பாதாள சாக்கடை ஆள் நுழைவு தொட்டிகளில் இருந்து கழிவு நீர் வெளியேறுவதை காண்பித்தனர். அப்போது அண்ணா வீதி, சந்திரி குளத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாதாள சாக்கடை ஆள் நுழைவு தொட்டிகளில் இருந்து கழிவுநீர் வெளியேறி குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதை அதிகாரிகள் பார்வையிட்டனர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் மயிலாடுதுறை- கும்பகோணம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News