வேதாரண்யம் அருகே இறந்து கரை ஒதுங்கிய ஆலிவர் ரெட்லி ஆமை
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் இருந்து புஷ்பவனம் கடற்கரை பகுதி வரை இந்த மழை காலங்களில் பசுபிக் பெருங்கடல் பகுதியில் வாழ்ந்து வரும் அரிய வகை ஆலிவர் ரெட்லி ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக இரண்டாயிரம் கிலோ மீட்டர் நீரோட்டத்திற்கு தகுந்தவாறு கடந்து இப்பகுதிக்கு வந்து, மேடான மணல் பரப்பில் குழி தோண்டி 15 முதல் 25 வரை முட்டைகள் இட்டு மூடிவிட்டு சென்றுவிடும். சமூக விரோதிகள் இந்த ஆமை முட்டைகளை, திருடிச் சென்று இதை சாப்பிட்டால் ஆண்மை அதிகமாகும் எனக்கூறி அதிக விலைக்கு விற்று விடுவார்கள்.
வனத்துறையினர் அந்த முட்டைகளை சேகரித்து கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை பகுதியில் உள்ள ஆமை குஞ்சுகள் பொறிப்பகத்தில் பாதுகாத்து குஞ்சுகள் வெளிவந்தவுடன் சுமார் 15 நாட்களுக்கு குறையாமல் பொறிப்பகத்தில் வளர்த்து கடலில் பின்னர் விடுவர்.
இந்த நிலையில் புஷ்பவனம் கடற்கரை பகுதியில் சுமார் 30 கிலோ எடையுள்ள ஆலிவர் ரெட்லி ஆமை இறந்து கரை ஒதுங்கியது. இயற்கை சீற்றம், கப்பல் மற்றும் படகுகளின் விசிறியில் அடிபட்டு ஆமை கரை ஒதுங்குவது வழக்கம் என மீனவர்கள் தெரிவித்தனர்.