செய்திகள்
பள்ளிகொண்டா அருகே கார் மோதி தொழிலாளி பலி
பள்ளிகொண்டா அருகே சாலையை கடக்க முயன்ற தொழிலாளி கார் மோதி பலியானார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
அணைக்கட்டு:
பள்ளிகொண்டாவை அடுத்த கழனிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் காசி (வயது 60), கட்டிட தொழிலாளி. இவர் நேற்று மாலை வேலை முடித்துவிட்டு கழனிப்பாக்கம் அருகே உள்ள முருகர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் வீட்டுக்கு செல்வதற்காக கந்தனேரி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது அந்த வழியாக ஆம்பூரில் இருந்து சென்னை நோக்கி வேகமாக சென்ற கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்து குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து கந்தனேரி தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது அதிகளவில் விபத்துகள் நடப்பதாகவும், இதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த முயன்றனர்.
ஆனால் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை. அதைத்தொடர்ந்து போலீசார் சாலையில் இறந்து கிடந்த காசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர்.
மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து, டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.