செய்திகள்
வறண்டு கிடக்கும் கறம்பக்குடி பெரியகுளத்தை காணலாம்.

பலத்த மழை பெய்தும் நிரம்பாத கறம்பக்குடி பெரியகுளம்

Published On 2020-12-08 15:39 IST   |   Update On 2020-12-08 15:39:00 IST
பலத்த மழை பெய்தும் பெரிய குளம் நிரம்பாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கறம்பக்குடி:

கறம்பக்குடி, புதுக்கோட்டை சாலையில் பெரியகுளம் உள்ளது. 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தின் மூலம் அந்த பகுதியில் சுமார் 200 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற்றுவந்தன. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த குளத்திற்கு வரும் வரத்துவாரிகள் அனைத்தும் அடைபட்டு கிடப்பதால் குளத்திற்கு தண்ணீர் வருவதில்லை. இதனால் விவசாயம் செய்ய முடியாமல் அப்பகுதியில் உள்ளவிவசாய நிலங்கள் தரிசாகவே கிடக்கின்றன.

சிலர் ஆழ்குழாய் கிணற்றின் மூலம் விவசாயம் செய்தபோதும் குளத்தில் தண்ணீர் தேங்காததால் கோடைகாலத்தில் நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கறம்பக்குடி பெரியகுளத்தை தூர்வாரி வரத்து வாரிகளை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

அதன்பேரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.35 லட்சத்தில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது மதகுகள் மட்டுமே சீரமைக்கப்பட்டது. ஆனால் வரத்துவாரிகள்சீரமைக்கப்படவில்லை. தற்போது, புரெவி புயலால் கனமழை பெய்து அனைத்து பகுதிகளிலும் ஏரி, குளங்கள் நிரம்பியபோதும் வரத்துவாரி அடைப்பால் கறம்பக்குடி பெரியகுளம் தண்ணீர் இன்றி வறண்டே காணப்படுகிறது.

இது குறித்து பெரியகுளம் ஆயக்கட்டு விவசாயிகள் கூறும்போது, வரத்துவாய்கால்களை சரிசெய்யாமல் மதகுகளை புதிதாக கட்டுவதில் பலன் இல்லை என கூறினோம். ஆனால் நிதி ஒதுக்கி வாய்காலை தூர்வாருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் கண்டுகொள்ளவில்லை. தற்போது மழை பெய்தும் குளம் நிரம்பவில்லை. எனவே இனிமேலாவது கறம்பக்குடி பெரியகுளம் வரத்து வரியை தூர்வார வேண்டும் என்றனர்.

Similar News