செய்திகள்
வடகாடு அருகே மாங்காடு பெரியகொல்லை பகுதியில் மழையால் சாய்ந்த சோளப்பயிர்கள்

தொடர் மழையால் பாதிப்புக்குள்ளான சோளம்-நெற்பயிர்கள்

Published On 2020-12-08 15:33 IST   |   Update On 2020-12-08 15:33:00 IST
தொடர்மழையால் சோளம்-நெற்பயிர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. மேலும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
அன்னவாசல்:

இலுப்பூர், அன்னவாசல், வீரப்பட்டி, முக்கண்ணாமலைப்பட்டி, காலாடிப்பட்டி, செங்கப்பட்டி, குடுமியான்மலை, காட்டுப்பட்டி, புதூர், பரம்பூர், வயலோகம், கடம்பராயன்பட்டி, கீழக்குறிச்சி, பெருமநாடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

இதனால், இப்பகுதியில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. வயல்களில் தேங்கிய மழைநீரை விவசாயிகள் கால்வாய் அமைத்து வெளியேற்றி வருகின்றனர். இந்த நிலையில் அன்னவாசல் பகுதிகளில் நேற்று பெய்த தொடர் மழையால் அன்னவாசல் அருகே உள்ள கடம்பராயன்பட்டியை சேர்ந்த தனலெட்சுமி, பரமசிவம் உள்ளிட்ட பலரது வயலில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமானது. எனவே மழையினால் நெற்கதிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்த பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டு இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் ஆதனக்கோட்டையை அடுத்த பெருங்களூர் அருகே உள்ள தென்னங்குடி கிராமத்தில் பூமி என்பவருக்கு சொந்தமான வயலில் பலத்த மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் அடைந்தது. இந்த பயிருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கறம்பக்குடிஅருகே உள்ள புதுப்பட்டியில் விவசாயி ஒருவரின் வயலில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் மழை நீரில் மூழ்கி வீணானது.

இதேபோல் அன்னவாசல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பெரும்பாலான விவசாயிகள் முக்கிய வாழ்வாதாரமாக விவசாயத்துக்கு அடுத்தப்படியாக கால்நடை வளர்ப்பு உள்ளது. தற்போது, தொடர் மழைபெய்து வருவதால் கால்நடைகளை மேய்ச்சலுக்க அழைத்து செல்ல முடியாதநிலையை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கால்நடை வளர்க்கும் ஆண்டி கூறுகையில், தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல முடியாமல் வீடுகளிலும், குடிசையிலும் கட்டி வைத்துள்ளோம். எனவே அரசு மானிய விலையில் தீவனங்கள் வழங்க வேண்டும். மேலும் கோழிகளுக்கு நோய் ஏற்பட்டு வருவதால்கால்நடை முகாம் நடத்த வேண்டும் என்றார்.

திருவரங்குளம் வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி, தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. திருவரங்குளம், வேப்பம்பட்டி, பூவரசகுடி, வள்ளகிராகோட்டை, திருவுடையார்பட்டி, கொத்த கோட்டை, மழவராயன்பட்டி, மாஞ்ஜான்விடுதி, காயாம்பட்டி, கல்லுபள்ளம், மாங்கநாம்பட்டி, தேத்தாம்பட்டி, திருக்கட்டளை, பொற்பனைக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகளின் வீடுகளில் கொட்டகை வசதியில்லாததால் ஆடுகளுக்கு நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே ஆட்டு கொட்டகை அமைக்க விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடகாடு மற்றும் மாங்காடு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சோளப்பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தற்போது, பெய்து வரும் மழையால் இதனை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த சோளப் பயிர்கள் மழையில் நனைந்து வீணாகி வருகிறது. அத்துடன் சோளப்பயிர்களில் உள்ள கதிர்கள் முளைத்து வருவதால் சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலையில் உள்ளனர். மேலும் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News