செய்திகள்
நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதி சீட்டையும், அதன் பின்புறம் இரட்டை இலை சின்னம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புற நோயாளிகளுக்கான அனுமதி சீட்டில் இரட்டை இலை சின்னம்

Published On 2020-12-08 04:00 IST   |   Update On 2020-12-08 04:00:00 IST
மழையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதி சீட்டில் இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே மழையூரில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான புற நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் நேற்று புற நோயாளிகளுக்கு வழங்கப்பட அனுமதி சீட்டில் இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது.

இதை அறிந்த தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டு வந்து நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட சீட்டை பார்வையிட்டனர். அதில் சீட்டின் பின்புறம் இரட்டை இலை சின்னம் இருந்தது. இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செல்லபாண்டியன் கட்சி நிர்வாகிகளுடன் வட்டார மருத்துவ அதிகாரி பஜ்ருல் அகமதுவிடம் புகார் தெரிவித்தார்.

அப்போது ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் தரப்பில் கூறும்போது, உள்ளாட்சி தேர்தலின்போது, பொது மக்களுக்கு வழங்கப்பட்ட துண்டு பிரசுரத்தை ஊழியர்கள் தவறுதலாக அனுமதிச்சீட்டாக பயன்படுத்தி நோயாளிகளுக்கு வழங்கி விட்டனர். அவ்வாறு அனுமதி சீட்டு வழங்கியது உடனடியாக நிறுத்தப்பட்டு விட்டது என்றனர்.

சுகாதாரத்துறை சார்பில் வழங்கப்படும் புறநோயாளிகளுக்கான அனுமதி சீட்டை முறையாக ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வினியோகிக்காததே இதுபோன்ற தவறுக்கு காரணம் என கூறிய தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர், இதுதொடர்ந்தால் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News