செய்திகள்
கல்லறை திருநாள்

கல்லறை திருநாள்: இறந்தவர்களுக்காக வீடுகளில் கிறிஸ்தவர்கள் வழிபட்டனர்

Published On 2020-11-02 13:23 IST   |   Update On 2020-11-02 13:23:00 IST
இறந்தவர்களை நினைவுகூர்ந்து ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கல்லறை விழா இந்த வருடம் நிறுத்தப்பட்டுள்ளது. வீடுகளிலேயே இறந்தவர்களுக்கு ஜெப வழிபாடு நடத்தும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை :

கிறிஸ்தவர்கள், தங்கள் குடும்பத்தில் இறந்தவர்களை நினைவுகூர்வதற்காக, ஆண்டுதோறும் நவம்பர் 2-ந் தேதி கல்லறை திருநாளை அனுசரிக்கிறார்கள்.

‘கல்லறை திருவிழா’ என்று அழைக்கப்படும் இந்த நாளில், கிறிஸ்தவர்கள் கல்லறை தோட்டங்களுக்கு சென்று, இறந்து அடக்கம் செய்யப்பட்டுள்ள தங்கள் குடும்பத்தினர் கல்லறையில் மலர் அலங்காரம் செய்வார்கள். மெழுகுவர்த்தி ஏற்றி வழிபடுவார்கள்.

கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். பாதிரியார்கள் கல்லறை தோட்டங்களுக்கு சென்று வழிபாடு நடத்துவார்கள். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.

இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக கிறிஸ்தவ ஆலயங்களில் வழிபாடு நிறுத்தப்பட்டுள்ளன. பொது மக்கள் கூட்டமாக ஆலயத்துக்கு வருவதும் தடை செய்யப்பட்டுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், இறந்தவர்களை நினைவுகூர்ந்து ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கல்லறை விழா இந்த வருடம் நிறுத்தப்பட்டுள்ளது. கல்லறை தோட்டத்துக்கும் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் வருவதால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.

எனவே இந்த விழாவை தவிர்க்க வேண்டும் என்று கிறிஸ்தவ சபைகள் அறிவித்து உள்ளன. இதனால் இன்று கல்லறை திருநாள் அனுசரிப்பது நிறுத்தப்பட்டு உள்ளது.

வீடுகளிலேயே இறந்தவர்களுக்கு ஜெப வழிபாடு நடத்தும்படி வேண்டுகோள் விதிக்கப்பட்டு உள்ளது.

எனவே இன்று கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளிலேயே இறந்தவர்களை நினைத்து ஜெப வழிபாடு செய்தனர். இந்த மாதத்தில் ஏதாவது ஒரு நாள் கல்லறை தோட்டத்துக்கு தனித்தனியாக சென்று மறைந்தவர்கள் கல்லறைகளை தரிசிக்கலாம் என்று அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

இன்று கல்லறை திருநாள் நிறுத்தப்பட்டு உள்ளதால், சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கல்லறை தோட்டங்கள் பூட்டப்பட்டு உள்ளன.

கல்லறை தோட்டங்களுக்கு கிறிஸ்தவர்கள் செல்வதை தடுக்க போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

இதுபோல், சிறிய கிராமங்களில் உள்ள கல்லறை தோட்டங்களுக்கும் இன்று செல்ல வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

கொரோனா காலத்தில் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கிறிஸ்தவ அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளன.

Similar News