செய்திகள்
கோப்புபடம்

காட்டுமன்னார்கோவில் அருகே தீ விபத்து: 3 ஓட்டல்கள் உள்பட 6 கடைகள் எரிந்து சேதம்

Published On 2020-08-29 12:48 IST   |   Update On 2020-08-29 12:48:00 IST
காட்டுமன்னார்கோவில் அருகே நடந்த தீ விபத்தில் 3 ஓட்டல்கள் உள்பட 6 கடைகள் எரிந்து சேதமானது.
காட்டுமன்னார்கோவில்:

காட்டுமன்னார்கோவில் அருகே ஆயங்குடி கீழபஜார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் அதே பகுதியை சேர்ந்த முஜிபுர்ரகுமான் (வயது 37), ஹஜி முகமது (36), ஆரிப் (44) ஆகிய 3 பேரும் தனித்தனியே ஓட்டல்கள் நடத்தி வருகின்றனர். அதேபோல் அப்துல் மஜித் என்பவர் மோட்டார் சைக்கிள் டயர் பஞ்சர் ஒட்டும் கடையும், பரமேஸ்வரன் என்பவர் சலூன் கடையும், ஹஜ்ஜி முகமது கோழி இறைச்சி கடையும் வைத்திருந்தனர். இந்த கடைகள் நேற்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. சற்று நேரத்தில் கடைகள் முழுவதும் பற்றி எரிந்தது. இதை பார்த்ததும் அக்கம், பக்கத்தினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. தொடர்ந்து தீ மள, மளவென பரவி வேகமாக எரிந்தது.

பின்னர் இது பற்றி காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் 6 கடைகளும் முற்றிலும் எரிந்து சேதமானது. இதில் ஹஜ்ஜி முகமது கடையில் பெட்டிக்குள் இருந்த கோழிகள் அனைத்தும் தீயில் கருகி செத்தன. அதேபோல் ஓட்டல்கள், பஞ்சர் கடை, சலூன் கடையில் இருந்த பொருட்களும் தீயில் கருகி நாசமானது. அப்துல் மஜித் பஞ்சர் கடையில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் வீட்டு பத்திரங்கள் முற்றிலும் எரிந்து விட்டதாக தெரிவித்தார். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.7 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் தீ விபத்து பற்றி அறிந்ததும் காட்டுமன்னார்கோவில் தாசில்தார் தமிழ்ச்செல்வன், ஒன்றியக்குழு தலைவர் சகதியா நிஜார்அகமது, ஊராட்சி மன்ற துணை தலைவர் நியமத்துல்லா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

Similar News