செய்திகள்
கடலூர் மாவட்டத்தில் பலத்த மழை: மின்னல் தாக்கி பெண் பலி
கடலூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் பலியானார்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடலூரில் நேற்று காலை முதல் மதியம் 1 மணி வரை வெயில் சுட்டெரித்தது. இதற்கிடையே மதியம் 1.30 மணியளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து, குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. பின்னர் 2 மணி அளவில் இடி-மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.
நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக கொட்டியது. இந்த மழை சுமார் ½ மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. அதன் பிறகு தூறிக்கொண்டே இருந்தது. பின்னர் மழை சற்று ஓய்ந்திருந்தது. இதற்கிடையே மழை பெய்த போது பலத்த காற்று வீசியதால், காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் கடலூர் பீச்ரோட்டில் உள்ள மரம் சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே மாலை 6 மணி அளவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இடைவிடாது 8 மணி வரை பெய்தது. அதன் பிறகு விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இந்த மழை இரவு 1 மணி வரை நீடித்தது. இந்த மழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கியது. இதேபோல் பண்ருட்டி, சிதம்பரம், நெய்வேலி, மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. இந்நிலையில் மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் பலியானார். அதுபற்றிய விவரம் வருமாறு:-
கடலூர் முதுநகர் அருகே உள்ள பெரியபிள்ளையார்மேடு பகுதியை சேர்ந்தவர் பாவாடைசாமி மனைவி மச்சகாந்தி (வயது 53). இவர் நேற்று மதியம் அதே பகுதியில் உள்ள தனது விளை நிலத்தில் மாடு மேய்த்து கொண்டிருந்த போது, இடி-மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது மின்னல் தாக்கியதில் மச்சகாந்தி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுதொடர்பாக கடலூர் முதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.