செய்திகள்
கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-1 வகுப்பில் 3,836 மாணவர்கள் சேர்க்கை - அதிகாரி தகவல்
கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-1 வகுப்பில் 3,836 மாணவ-மாணவிகள் சேர்ந்துள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடலூர்:
கொரோனா பொதுமுடக்கத்தால் பள்ளிகள் செயல்படாத நிலையில் அரசு, அரசு நிதி உதவிப்பெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையில் மாணவ-மாணவிகள் சேர்க்கை கடந்த 17-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ள 790 தொடக்கப்பள்ளி, 179 நடுநிலைப் பள்ளி, 245 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இச்சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இதில் கடந்த 24-ந் தேதி பிளஸ்-1 சேர்க்கை தொடங்கிய நிலையில், 3,836 பேர் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் அரசுப்பள்ளியில் 2,864 பேரும், அரசு நிதிஉதவிப்பெறும் பள்ளியில் 972 பேரும் சேர்ந்துள்ளனர்.
அரசு, அரசு உதவிப்பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இதுவரையில் 1-ம் வகுப்பில் 6,904 பேரும், இரண்டாம் வகுப்பில் 465 பேரும், 3-ம் வகுப்பில் 420 பேரும், 4-ம் வகுப்பில் 390 பேரும், 5-ம் வகுப்பில் 254 பேரும், 6-ம் வகுப்பில் 452 பேரும், 7-ம் வகுப்பில் 29 பேரும், 8-ம் வகுப்பில் 11 பேரும் சேர்ந்துள்ளனர். இதேப்போன்று உயர்நிலை மற்றும் மேல்நிலை அளவிலான பள்ளிகளில் 6-ம் வகுப்பில் 3,885 பேரும், 7-ம் வகுப்பில் 127 பேரும், 8-ம் வகுப்பில் 103 பேரும், 9-ம் வகுப்பில் 2,145 பேரும், 10-ம் வகுப்பில் 21 பேரும், 11-ம் வகுப்பில் 3,836 பேரும், 12-ம் வகுப்பில் 2 பேரும் சேர்ந்துள்ளனர்.
மேற்கண்ட தகவலை கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.