செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள்.- மதியழகன்

வேதாரண்யம் அருகே நாயை துப்பாக்கியால் சுட்டவர் கைது - 2 துப்பாக்கிகள் பறிமுதல்

Published On 2020-08-24 14:25 IST   |   Update On 2020-08-24 14:25:00 IST
வேதாரண்யம் அருகே நாயை துப்பாக்கியால் சுட்டவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 2 துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர்.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா கத்தரிப்புலம் கோவில் வடக்கு குத்தகையை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி பாக்கியலட்சுமி(வயது50). இவர் தனது வீட்டு காவலுக்காக ஒரு நாயை வளர்த்து வந்தார். சம்பவத்தன்று பாக்கியலட்சுமி வீட்டின் வழியாக நாகக்குடையானை சேர்ந்த மதியழகன்(59) என்பவர் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை பாக்கியலட்சுமி வளர்த்து வந்த நாய் துரத்தி சென்றது. இதனால் ஆத்திரமடைந்த மதியழகன் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் நாயை சுட்டார்.

அப்போது துப்பாக்கியில் இருந்து வந்த குண்டு வேறு திசை நோக்கி சென்றது. இதனால் நாய் உயிர் தப்பியது.

இது குறித்து பாக்கியலட்சுமி கரியாப்பட்டினம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாயை துப்பாக்கியால் சுட்ட மதியழகனை கைது செய்து, அவரிடம் இருந்த 2 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். நாயை துப்பாக்கியால் ஒருவர் சுட்ட சம்பவம் அந்தபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News