செய்திகள்
கொரோனா வைரஸ்

வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரிப்பு- டாக்டர் உள்பட 184 பேருக்கு கொரோனா

Published On 2020-08-22 12:48 IST   |   Update On 2020-08-22 12:48:00 IST
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் டாக்டர் உள்பட 184 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியது.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தினமும் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 19-ந் தேதி 161 பேரும், நேற்று முன்தினம் 144 பேரும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தாலும் அதன்பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று வெளியான பரிசோதனை முடிவில் ஒரேநாளில் வேலூர் மாவட்டத்தில் 90 பெண்கள் உள்பட 184 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதில் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை டாக்டர் ஒருவர், மருத்துவமனை ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலூர் மாநகராட்சியில் பாகாயம் பகுதியில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. மேலும் சைதாப்பேட்டை, வேலப்பாடி, சேண்பாக்கம், சத்துவாச்சாரி, பூந்தோட்டம் என அனைத்து பகுதிகளிலும் கொரோனா தொற்று பரவி உள்ளது.

வேலூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று வந்த 5 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாநகராட்சி பகுதியில் மட்டும் 80 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று மாவட்டம் முழுவதும் பாதிப்பு அதிகரித்து உள்ளது. இதன்மூலம் வேலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,161 ஆக உயர்ந்துள்ளது.

Similar News