செய்திகள்
சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தம்

வேலூர் மாவட்டத்தில் 4 சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தம்

Published On 2020-08-21 06:48 GMT   |   Update On 2020-08-21 06:48 GMT
வேலூர் மாவட்டத்தில் 18 வயது நிரம்பாத 4 சிறுமிகளின் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
வேலூர்:

வேலூர் மாவட்ட சைல்டுலைன் அலுவலகத்துக்கு வேலூரை அடுத்த இடையஞ்சாத்து பகுதியில் 18 வயது நிரம்பாத சிறுமிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக புகார்கள் வந்தன. அதன்பேரில் வேலூர் ஒன்றிய சமூக நலஅலுவலர் பூங்கொடி, சைல்டுலைன் அலுவலர்கள், பாகாயம் போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது அந்த பகுதியில் கடந்தாண்டு பிளஸ்-2 முடித்த மாணவிக்கும், பாலமதியை சேர்ந்த 28 வயது வாலிபருக்கும் கோவில் ஒன்றில் வருகிற 28-ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும் சிறுமியின் பெற்றோரிடம் 18 வயது நிரம்பிய பின்னரே திருமணம் செய்து கொடுப்போம் என்று சமூகநல அலுவலர் எழுதி வாங்கினார்.

வடுகந்தாங்கல் அருகே பிளஸ்-1 படிக்கும் 16 வயது சிறுமிக்கும், மேல்மாயிலை சேர்ந்த 33 வயது வாலிபருக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) திருமணம் நடைபெற இருந்தது. இதனை அறிந்த அந்த பகுதி சமூகநல அலுவலர், சைல்டுலைன் அலுவலர் நேற்று முன்தினம் இரவு அங்கு சென்று சிறுமி திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

அதேபோன்று கருகம்புத்தூரை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், குடியாத்தம் தட்டம்பாறையை 33 வயது வாலிபருக்கும், பனமடங்கி அருகேயுள்ள பள்ளத்தூரை சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் 16 வயது மாணவிக்கும், குடியாத்தம் கருனீகசமுத்திரத்தை சேர்ந்த 27 வயது வாலிபருக்கும் வருகிற 28-ந் தேதி நடைபெற இருந்த திருமணத்தை சைல்டுலைன் அலுவலர்கள், ஒன்றிய சமூகநல அலுவலர்கள், போலீசார் உதவியுடன் தடுத்து நிறுத்தினார்கள்.
Tags:    

Similar News