செய்திகள்
கடலூர் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் - 15 பேர் கைது
கடலூர் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில தலைமை அலுவலகத்தையும், மூத்த தலைவர் நல்லகண்ணு பற்றியும் சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவு செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி மாநிலம் முழுவதும் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி நேற்று கடலூர் ஒன்றிய அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணை செயலாளர் குளோப் தலைமை தாங்கினார். நகர செயலாளர் அரிகிருஷ்ணன், வட்டக்குழு நிர்வாகிகள் நாகராஜ், பாக்கியம், அமாவாசை, வீரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் துரை கலந்து கொண்டு பேசினார். இதில் வட்ட துணை செயலாளர் சுந்தர்ராஜா, நிர்வாகிகள் ஆதிமூலம், மாயவன், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள தபால் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் வி.எம்.சேகர் தலைமை தாங்கினார். நகர செயலாளர் தமிமுன் அன்சாரி, வட்ட செயலாளர் அன்பழகன், மாவட்ட குழு உறுப்பினர் சித்ரா குமாரி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதேபோல் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட பொருளாளர் செல்வராஜ் தலைமையில், ஸ்ரீமுஷ்ணம் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் சசிகுமார், பெருமாள், அய்யப்பன், சுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன், சின்னப்பராஜ், செல்வராசு, ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கிடையே தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மாவட்ட பொருளாளர் செல்வராஜ் உள்ளிட்ட 15 பேரை ஸ்ரீமுஷ்ணம் போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் வட்டக்கிளை சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தாலுகா அலுவலகம் முன்பு கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் விஜய பாண்டியன் தலைமை தாங்கினார். பட்டுசாமி, அறிவழகி, துரை நடராஜன், துரைமணி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நிர்வாகிகள் சுப்பிரமணியன், முருகையன், நிதி உலகநாதன், சின்னத்துரை, செல்வராசு, ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.