செய்திகள்
கொரோனாவால் தொடரும் சோகம்- சைக்கிளில் டீ விற்கும் வாடகை கார் உரிமையாளர்
நாகை அருகே கொரோனா ஊரடங்கால் தவணை தொகை செலுத்த முடியாமல் வாடகை கார் உரிமையாளர் ஒருவர் சைக்கிளில் சென்று டீ விற்று வருகிறார்.
நாகூர்:
நாகை அருக உள்ள நாகூர் புதுமனைத்தெருவை சேர்ந்தவர் முகமதுமைதீன் (வயது 45). வாடகை வீட்டில் வசித்து வரும் முகமதுமைதீன் கடந்த 20 ஆண்டுகளாக வாடகை கார் ஓட்டிவந்தார். இந்தநிலையில், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சிறுக சிறுக தான் சேர்த்து வைத்திருந்த பணம் மற்றும் வங்கி கடனில் கார் வாங்கி ஓட்டி வந்தார். இந்தநிலையில் அவரது வாழ்வை புரட்டி போடும் வகையில் கொரோனா ஊரடங்கு வந்து சேர்ந்தது. இதனால் கார் ஓட்ட முடியாததால் வருமானமின்றி அவர் தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், மாத தவணை கட்டுவதற்கு வங்கிகள் நெருக்கடி கொடுக்கவே, வேறு வழியின்றி தற்போது சைக்கிளில் தெரு தெருவாக சென்று டீ, வடை விற்று பிழைப்பு நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார். சென்னைக்கு ஒருமுறை சவாரி சென்று வந்தால், செலவுகள் போக ரூ.1500 லாபம் கிடைக்கும் என கூறும் முகமதுமைதீன், தற்போது டீ விற்பதன் மூலம் ஒரு நாளில் ரூ.500 கூட சம்பாதிக்க முடியவில்லை என வேதனையுடன் கூறுகிறார்.
மனைவி மற்றும் 2 குழந்தைகளோடு மிகுந்த சிரமத்தோடு வாழ்ந்து வரும் முகமதுமைதீன் கடந்த 3 மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக பலரும் பல இன்னல்களை சந்திப்பதற்கு அரசின் திட்டமிடல் இல்லாத நடவடிக்கைகள்தான் காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
எனவே முகமதுமைதீன் போல துயரை சந்தித்து வருபவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.