செய்திகள்
குளம்போல தேங்கி நிற்கும் கழிவு நீர்

குளம்போல தேங்கி நிற்கும் கழிவு நீர்- பொதுமக்கள் அவதி

Published On 2020-08-17 14:30 IST   |   Update On 2020-08-17 14:30:00 IST
நாகை டாடா நகரில் கழிவு நீர் குளம்போல சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனர்.
நாகப்பட்டினம்:

நாகை நகராட்சிக்கு உட்பட்ட டாடா நகரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகளில் இருந்து கழிவுநீர் பாதாள சாக்கடை மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த பாதாள சாக்கடையில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. கடந்த 2 வாரத்துக்கு மேலாக இந்த பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் குளம்போல சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது.

இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

டாடா நகரில் உள்ள பாதாள சாக்கடையில் இருந்து அடிக்கடி கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதை நகராட்சி ஊழியர்கள் வந்து சரி செய்வார்கள். இருப்பினும் தொடர்ந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவும் சூழலில் இந்த பாதாள சாக்கடை கழிவுநீரில் இருந்து ஏதேனும் தொற்றுநோய் பரவக்கூடுமோ என்கிற அச்சம் நிலவி வருகிறது. எனவே பாதாளச் சாக்கடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். 

இவ்வாறு அந்த பகுதி மக்கள் கூறினர்.

Similar News