செய்திகள்
சீர்காழியில் உள்ள கோவில் உண்டியலில் மனு செலுத்தியபோது எடுத்தபடம்.

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை அகல வேண்டி கோவில் உண்டியலில் மனு

Published On 2020-08-16 13:01 IST   |   Update On 2020-08-16 13:01:00 IST
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை அகல வேண்டி கோவில் உண்டியலில் மனு செலுத்தப்பட்டது.
சீர்காழி:

ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படும். இதையொட்டி பல்வேறு வீதிகளில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கும் நிகழ்வு நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சிலைகளை வீதிகளில் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்துவதற்கு அரசு தடை விதித்துள்ளது.

இந்த தடையை நீக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசை வலியுறுத்தி வருகிறார்கள். கொரோனாவை கட்டுப்படுத்த அரசு கூறும் வழிமுறைகளை பின்பற்றி விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த அனுமதிக்க வேண்டும் என இந்து அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

ஆனால் அரசு தடையை நீக்கவில்லை. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான தடை அகல வேண்டும் விதமாக மயிலாடுதுறை அருகே சீர்காழியில் உள்ள ஆபத்து காத்த விநாயகர் கோவில் உண்டியலில் மனு செலுத்தும் நிகழ்ச்சி நேற்று இந்து மக்கள் கட்சி சார்பில் நடந்தது.

இதில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களுக்கு ஏற்பட்டுள்ள இடையூறுகள் நீங்கி, நல்ல விதமாக விழா நடைபெற அருள் புரிய வேண்டும் என்று மனுவாக எழுதப்பட்டு கோவில் உண்டியலில் செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சாமிநாதன், மாவட்ட அமைப்பாளர் பாலாஜி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News