செய்திகள்
விநாயகர் சிலைகளுடன் மண்பாண்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய அனுமதி வழங்கக்கோரி, கடலூரில் சிலைகளுடன் மண்பாண்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. இந்த பண்டிகை என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது விதவிதமான வடிவங்களில் உள்ள விநாயகர் சிலைகள் தான். ஒரு அடி முதல் சுமார் 10 அடி வரையிலான சிலைகளை பொதுமக்கள் வாங்கி, வழிபட்டு நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.
இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய அரசு தடை விதித்துள்ளது. இதனால் விநாயகர் சிலைகளை தயாரித்து விற்பனை செய்யும் கைவினை காகிதகூழ் மற்றும் களிமண் பொம்மைகள் தயாரிப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொழிலை மட்டுமே நம்பியுள்ள இவர்கள் ஏற்கனவே ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது விநாயகர் சிலைகள் விற்பனைக்கும் அரசு தடை விதித்துள்ளதால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும். சிலைகள் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே நேற்று காலை கைவினை காகிதகூழ் மற்றும் களிமண் பொம்மைகள் தயாரிப்பாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் மண்பாண்ட தொழிலாளர்கள் விநாயகர் சிலைகளுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் முருகன் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் திருநாவுக்கரசு, குமார், ஒருங்கிணைப்பாளர் கணபதி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங் களை எழுப்பினர்.