செய்திகள்
கஞ்சா விற்பனை வழக்கில் கைதான 5 பேரையும் (அமர்ந்திருப்பவர்கள்) படத்தில் காணலாம்.

கடலூர் அருகே ரூ.5 லட்சம் கஞ்சா பறிமுதல் - 5 பேர் கைது

Published On 2020-08-08 07:22 GMT   |   Update On 2020-08-08 07:22 GMT
கடலூர் அருகே ரூ.5 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர்:

நெல்லிக்குப்பம் பகுதியில் அதிக அளவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்வுக்கு பல்வேறு புகார்கள் சென்றன. இதையடுத்து கஞ்சா விற்பவர்களை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாத் தலைமையில், பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி, நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் வீரமணி ஆகியோரை கொண்ட தனிப்படையை அமைத்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் உத்தரவிட்டார்.

இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நெல்லிக்குப்பம் ரெயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 5 பேரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், நெய்வேலி இந்திராநகரை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் மகன் முனீஸ் என்கிற முனுசாமி (வயது 23), பில்லாலிதொட்டியை சேர்ந்த ஞானவேல் மகன் விமல்ராஜ்(25), அய்யனார் மகன் ஆனந்தராஜ்(24), கலியவரதன் மகன் பிரதீப்ராஜ்(21), கே.என்.பேட்டையை சேர்ந்த வேல்முருகன் (35) என்பதும், கடலூர் கே.என்.பேட்டை மற்றும் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் இருந்து கஞ்சா வாங்கி வந்து, காராமணிக்குப்பம் சந்தை பகுதியில் பதுக்கி வைத்து மொத்தமாக விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து காராமணிக்குப்பம் வாரச்சந்தையில் பதுக்கி வைத்திருந்த 30 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனுசாமி உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் மற்றும் 5 செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News