செய்திகள்
கோப்புபடம்

ஊழியருக்கு கொரோனா தொற்று குன்றத்தூர் பத்திரப்பதிவு அலுவலகம் மூடல்

Published On 2020-08-05 07:20 GMT   |   Update On 2020-08-05 07:20 GMT
ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பத்திரப்பதிவு செய்யப்பட்டதால்குன்றத்தூர் பத்திரப்பதிவு அலுவலகத்தை அதிகாரிகள் இழுத்து மூடினர்.
பூந்தமல்லி:

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர், சம்பந்தம் நகரில் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நிலங்கள் மற்றும் திருமணங்கள் பதிவு செய்யப்படுவது வழக்கம். இங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அலுவலகத்தை மூடாமல் வழக்கம்போல் நேற்றும் அலுவலகம் செயல்பட்டது.

இதனை அறியாமல் ஏராளமானோர் பத்திரப்பதிவு செய்ய டோக்கன்கள் வாங்கியும், பணத்தை செலுத்தியும் இருந்தனர். இதனை அறிந்த பேரூராட்சி அதிகாரி வெங்கடேசன் தலைமையிலான அதிகாரிகள் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் வெளியேற்றி அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து அலுவலகத்தை இழுத்து மூடினார்கள்.

மீண்டும் நாளை (வியாழக்கிழமை) பத்திரப்பதிவு அலுவலகம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது. ஊழியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இங்கு பணிபுரியும் மற்ற ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பயம் எதுவும் இல்லாமலும், சமூக விலகல் கடைபிடிக்காமலும் பத்திரப்பதிவு அலுவலகம் வழக்கம் போல் செயல்பட்டது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News