செய்திகள்
வேதாரண்யம், கோடியக்கரை கடலில் பக்தர்கள் குளிக்க தடை - வருவாய் கோட்டாட்சியர் தகவல்
ஆடி அமாவாசையன்று வேதாரண்யம், கோடியக்கரை கடலில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம், கோடியக்கரை கடலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளாய அமாவாசை காலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி மூதாதையர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இந்தநிலையில் வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு கடலில் புனித நீராடுவது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் பழனிகுமார் தலைமையில் நடைபெற்றது. தாசில்தார் முருகு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கடலோர காவல் குழும போலீசார், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் பழனிகுமார் கூறுகையில்,
நாளை(திங்கட்கிழமை) ஆடி அமாவாசையை முன்னிட்டு வேதாரண்யம், கோடியக்கரை கடலில் புனித நீராட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் வர வாய்ப்புள்ளது. எனவே ஆடி அமாவாசையன்று கடலில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்படும். மேலும் கோவில்களும் திறக்கப்படாது. கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதால் வெளி மாவட்டம், வெளியூர் மற்றும் உள் கிராமங்களிலிருந்து யாரும் கடலில் புனித நீராட வரவேண்டாம் என்றார்.