செய்திகள்
தனியார் மயமாக்கும் முடிவுக்கு எதிர்ப்பு: ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரெயில்வே ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரெயில்வே ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தெட்சின ரெயில்வே எம்ப்ளாய்ஸ் யூனியன் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு யூனியனின் திருவாரூர் கிளை செயலாளர் தனபால் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்க சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் மணி, சுமை பணி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முனியாண்டி, கட்டுமான சங்க மாவட்ட தலைவர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
பொதுத்துறை நிறுவனமான ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். ரெயில்வே துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் ஜீவா, மாவட்ட பொருளாளர் ரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.