செய்திகள்
கொரோனா வைரஸ்

பல்லாவரம் நகராட்சியில் ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா

Published On 2020-06-14 11:28 IST   |   Update On 2020-06-14 11:28:00 IST
பல்லாவரம் நகராட்சியில் நேற்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.
தாம்பரம்:

சென்னையை அடுத்த பல்லாவரம் நகராட்சியில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதன்மூலம் பல்லாவரம் நகராட்சியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல் பம்மல் நகராட்சிக்கு உட்பட்ட நாகல்கேணி, எம்.ஜி.ஆர். சாலையில் உள்ள ஒரு கடையில் பணிபுரியும் 4 ஊழியர்களுக்கு,நேற்று கொரோனா உறுதியானது. இதனால் அந்த கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். இதன் மூலம் பம்மல் நகராட்சியில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது. இதில் 31 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கொரோனா ஊரடங்கால் 15 நாடுகளில் சிக்கித்தவித்த 7,513 பேர் சிறப்பு விமானங்கள் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு பிறகு தனிமைப்படுத்தப்பட்டனர். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் இதுவரை 177 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதில் 71 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இந்த நிலையில் முகாமில் தங்கியிருந்தவர்களில் கத்தாரில் இருந்து வந்த 10 பேருக்கும், ஒமனில் இருந்து வந்த ஒருவருக்கும், எத்தியோப்பியாவில் இருந்து வந்த 2 பேருக்கும் என மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

அதேபோல் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்துக்கு பல்வேறு நகரங்களில் இருந்து 429 விமானங்களில் 29 ஆயிரத்து 461 பேர் வந்து உள்ளனர். இவர்கள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். இதில் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Similar News