செய்திகள்
உயிரிழப்பு

மகளிர் சுயஉதவி குழுவினரிடம் ரூ.2 கோடி மோசடியில் ஈடுபட்டவர் திடீரென இறந்ததால் பரபரப்பு

Published On 2020-06-06 10:46 GMT   |   Update On 2020-06-06 10:46 GMT
மயிலாடுதுறை அருகே மகளிர் சுய உதவி குழுவினரிடம் ரூ.2 கோடி மோசடியில் ஈடுபட்டவர் திடீரென இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பாலையூர்:

நாகை மாவட்டம் குத்தாலம் அருகே கீழவெளி கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கரன்(வயது52). இவர் குத்தாலம், மாதிரிமங்கலம், மயிலாடுதுறை, மாப்படுகை, சீர்காழி, சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களின் தலைவர்களை சந்தித்து ரூ.10 ஆயிரம் கொடுத்தால் உங்களுக்கு ரூ.1 லட்சம் நிதி கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் மதுரையை சேர்ந்த ஒரு நிறுவனம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பணம் அளிக்க இருக்கிறது. இதற்கு நான் புரோக்கராக உள்ளேன் என்று கூறி அவர்களிடம் கடந்த 2 ஆண்டுகளாக ரூ.2 கோடி வசூல் செய்துள்ளார். இவருக்கு உதவியாக கொண்டல் தேனூரை சேர்ந்த ஜான்சிராணி இருந்துள்ளார். மகளிர் சுய உதவி குழுவினரிடம் வசூல் செய்த பணத்தை பாஸ்கரன், மதுரையை சேர்ந்த சாந்தி, தாமரை ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்தநிலையில் பணத்தை கொடுத்த மகளிர் சுய உதவிக்குழுவினர் 2 ஆண்டுகள் ஆகியும் நிதி வராததால் சந்தேகம் அடைந்தனர். இதுகுறித்து பாஸ்கரிடம் பணத்தை கொடுத்தவர்கள் கேட்டனர். இதையடுத்து பாஸ்கரன் தான் கொடுத்து வைத்திருந்த பணத்தை மதுரையை சேர்ந்த சாந்தி, தாமரை ஆகியோரிடம் கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள் பணம் வராது, நீ மஞ்சள் நோட்டீஸ் கொடுத்து விடு, பிறகு பார்க்கலாம் என்று அலட்சியமாக கூறியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த பாஸ்கர் நேற்றுமுன்தினம் காலையில் திடீரென மாரடைப்பால் இறந்துவிட்டார். தகவல் அறிந்ததும் பணம் கொடுத்து ஏமாந்த மகளிர் சுய உதவி குழுவினர் பாஸ்கர் வீட்டுக்கு வந்து எங்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்று கூறி அவரது உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்தனர். தகவல் அறிந்த குத்தாலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்தை நடத்தினர். இதையடுத்து பாஸ்கரன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மகளிர் சுய உதவி குழுவினர் குத்தாலம் போலீசில் புகார் கொடுத்தனர். ஆனால் குத்தாலம் போலீசார் இந்த வழக்கு நாகை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்துள்ளனர்.
Tags:    

Similar News