செய்திகள்
தடுப்புகள் வைத்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என்ற அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளதை காணலாம்

தாய்-மகனுக்கு கொரோனா: அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதி

Published On 2020-05-25 13:24 IST   |   Update On 2020-05-25 13:24:00 IST
வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த தாய்-மகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இருவரும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர்:

வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த ஒருவர் அரபுநாட்டில் பணிபுரிந்து வருகிறார். அவருடைய மனைவிக்கு 52 வயதாகிறது. இந்த தம்பதிக்கு 27 வயதில் மகன் உள்ளார். இவர், வேலூர்-ஆற்காடு சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை கார் நிறுத்துமிடத்தில் டோக்கன் கொடுக்கும் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தாய்-மகன் இருவருக்கும் சளி, இருமல் இருந்துள்ளது.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து கணவர் செல்போனில் மனைவியுடன் பேசி உள்ளார். அப்போது அவர் அடிக்கடி இருமியபடி பேசி உள்ளார். அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும்படி மனைவியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் தாயும், மகனும் பரிசோதனை செய்வதற்கு மருத்துவமனைக்கு செல்லவில்லை.

அதனால் கணவர் வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் கொரோனா கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து சுகாதாரத்துறையினர் மற்றும் மருத்துவக்குழுவினர் அவர்களின் வீட்டுக்கு சென்று இருவரின் சளிமாதிரியையும் சேகரித்து சென்றனர்.

இந்த நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியானது. அதில், தாய்-மகனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதைத்தொடர்ந்து மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் அலுவலர்கள் 2 பேரிடமும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள் ஆம்புலன்சில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர். மேலும் அவர்களின் வீட்டு மாடியில் தங்கியிருந்த 2 பேரும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அதன்பின்னர் அந்த வீடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அந்த தெருவில் வசிக்கும் மக்கள் பிற பகுதிக்கு செல்லாதவாறு தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட தெருவாக அறிவிக்கப்பட்டது. மேலும் அங்கு பாதுகாப்பு பணிக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், வாலிபர் தனியார் மருத்துவமனையில் கார் நிறுத்துமிடத்தில் டோக்கன் கொடுத்து வாங்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணிபுரியும் நபர்கள் அல்லது கொரோனா சிகிச்சைக்கு வந்தவர்களுக்கு டோக்கன் கொடுத்து, வாங்கும்போது கொரோனா தொற்று பரவி இருக்கலாம். மேலும் அங்கு பணிபுரிந்த வேறு யாருக்காவது கொரோனா தொற்று உள்ளதா? என்று பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது என்று தெரிவித்தனர்.

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 38 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதில் ஒருவர் உயிரிழந்து விட்டார். 31 பேர் சிகிக்சைக்கு பின்னர் வீடு திரும்பினர். மீதமுள்ள 6 பேருக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மற்றும் சி.எம்.சி. மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது தாய்-மகன் இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதால் அவர்களையும் சேர்த்து 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News