செய்திகள்
முடிதிருத்தம்

கடலூர் மாவட்டத்தில் நகராட்சி-பேரூராட்சி பகுதிகளில் சலூன் கடைகள் திறப்பு

Published On 2020-05-24 14:38 IST   |   Update On 2020-05-24 14:38:00 IST
கடலூர் மாவட்டத்தில் நகராட்சி-பேரூராட்சி பகுதிகளில் சலூன் கடைகள் திறக்கப்பட்டன.

கடலூர்:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுபடுத்தும் வகையில் 144 தடை உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற கடைகளை திறக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

தற்போது ஊரடங்கு உத்தரவினை படிப்படியாக தளர்வுகளை தமிழக முதல்-அமைச்சர் அறிவித்து வருகிறார். ஏற்கனவே ஊரக பகுதிகளில் சலூன்கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நகராட்சி பகுதிகளில் உள்ள சலூன் கடை தொழிலாளர்கள் கடையை திறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அதன்படி தமிழகத்தில் சென்னையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் நகராட்சி பேரூராட்சி பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் 61 நாள் ஊரடங்கிற்கு பிறகு இன்று காலை 7 மணி முதல் கடைகள் திறக்கப்பட்டன. தினமும் காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை கடையை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சலூன்கடைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும். கடைக்கு வருபவர்களுக்கு சானிடைசர்கள் வழங்க வேண்டும், கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும். சலூன் கடைகளில் வேலைபார்க்கும் தொழிலாளர்களும் முக கவசம் அணிந்து வேலை பார்க்க வேண்டும்.

கடைகளில் 3 பேருக்கு மேல் கூடக்கூடாது. குளிர்சாதன வசதி இருக்கும் கடைகள் திறக்கக்கூடாது. தற்போது கடையை திறக்க அனுமதி அளித்ததால் சலூன் கடை தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நகர பகுதிகளில் உள்ள முடி வெட்ட முடியாமல் தவித்த ஆண்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News