செய்திகள்
கொரோனா வைரஸ்

25 நாட்களுக்கு பின்னர் சிவகங்கையில் மீண்டும் கொரோனா

Published On 2020-05-14 13:25 IST   |   Update On 2020-05-14 13:25:00 IST
கடந்த 25 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக விளங்கிய சிவகங்கையில் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடி:

கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்தது.

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த மாதம் 2-ந்தேதி திருப்பத்தூரைச் சேர்ந்த 48 வயது நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதன் பின்னர் சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 11 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 24 மணி நேரமும் டாக்டர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த அவர்கள் பூரண குணமடைந்தனர். படிப்படியாக அனைவரும் வீடு திரும்பினர்.

கடந்த மாதம் 19-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை அதாவது 25 நாட்களாக கொரோனா தொற்று இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் காரைக்குடி ரெயில்வே குட்ஷெட் பகுதியைச் சேர்ந்த 27 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. உடனடியாக அவர் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

கொரோனா பாதித்த பெண் சமீபத்தில் மும்பையில் இருந்து காரைக்குடி திரும்பியது தெரிய வந்துள்ளது. அவர் வசித்து வந்த பகுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 25 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக விளங்கிய சிவகங்கையில் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News